திருச்செந்தூரில் பக்தர்களின்றி நடந்த தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷாசூரசம்ஹாரம்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷாசூரசம்ஹாரம் பக்தர்களின்றி கோவில் வளாகத்தில் நடந்தது.
10 ஆம் திருநாளான நேற்று மஹிசாசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகம் வந்தார்.
முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் சிங்கமுகம், எருமை முகம் மற்றும் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனை வதம் செய்தார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம் நடைபெற்றதால் குலசேகரப்பட்டினம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments